ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

23 hours ago 2

சென்னை: ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

இதை ஒன்றிய , மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும். அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article