பொதிகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு வைகோ எம்பி மனு

2 hours ago 2

திருமங்கலம்: திருமங்கலத்தில் பொதிகை, குருவாயூர், திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ எம்பி ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக எம்பி வைகோ, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரைக்கு அருகிலுள்ள நகரமான திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களின் போக்குவரத்து தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்த பகுதியை சேர்ந்த பலரும் சென்னைக்கு சென்று வருகின்றனர். தற்போது எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சென்னை-தூத்துக்குடி முத்துநகர் (வண்டி எண் 12694 மற்றும் 12693), சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20636 மற்றும் 20635) ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே திருமங்கலத்தில் நின்று செல்கின்றன. இதில் அதிகாலை 3.45 மணிக்கு சென்னையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் வருகிறது. திருமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரயிலில் விளக்குகளை எரியவிட்டு அனைத்து பொருள்களுடன் கீழே இறங்க வேண்டியுள்ளது. இது பயணிகளுக்கு அசௌரியத்ததை ஏற்படுத்தி வருகிறது.

திருமங்கலம் பயணிகளுக்கு மிகவும் வசதியாக பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12661 மற்றும் 12662) ரயில் அமைகிறது. ஆனால் இந்த ரயில் நிற்காது. எனவே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை திருமங்கலத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர பகல் வேளைகளில் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16127 மற்றும் 16128) மற்றும் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22627 மற்றும் 22628) திருமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டு ரயில்களும் ஏற்கனவே பல சிறிய நகரங்களில் நின்று செல்கின்றன. எனவே திருமங்கலத்தில் நின்று செல்ல நிறுத்தம் வழங்க வேண்டும். திருமங்கலத்தில் கூடுதல் ரயில்கள் நிறுத்தப்பட்டால் சென்னைக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பொதிகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு வைகோ எம்பி மனு appeared first on Dinakaran.

Read Entire Article