அஞ்சுகிராமம்,அக்.9: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பொட்டல்குளத்தில் 1942ல் அரசு தொடக்க பள்ளி தொடங்கப்பட்டது. பொட்டல்குளம், சுந்தரபுரம், புன்னார்குளம், வேளாங்கண்ணி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வந்தனர். சுமார் 44 வருடங்களுக்குப் பிறகு இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக 1986ல் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 2010ல் ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்கப்பட்டது. சுமார் 84 வருடம் பழமையான பள்ளி ஆகும். இந்நிலையில் இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் முயற்சி எடுத்து வந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது பொட்டல்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் அரசு, இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இருந்து வக்கீல் பாலகிருஷ்ணனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
The post பொட்டல்குளம் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு appeared first on Dinakaran.