தேனி, ஜன. 11: தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தொடர்விடுமுறை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இன்று (11ம் தேதி) முதல் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தேனி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று (11ம்தேதி) முதல் வருகிற 19ம் தேதி வரை பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையாக உள்ளது.
தொடர்விடுமுறையின்போது, அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், இளநிலை மின்பொறியாளர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து உபமின்நிலையங்கள், மின்விநியோக பாதைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மின்கட்டுமான அமைப்புகளையும் தொடர்ச்சியாக கண்காணித்து இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் மின்தடங்கல் ஏற்பட்டால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மின்னகர் மின்நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்து தடையற்ற மின்சேவையை பெறலாம் என மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
The post பொங்கல் விடுமுறை தினத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க சிறப்பு ஏற்பாடு: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.