தமிழக மக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்காததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, ரூ.1,000 சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல், அதிக கனமழை போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகி மக்கள் மனஉளைச்சலில் இருந்து வரும் நிலையில், திமுக அரசின் பொங்கல் தொகுப்பில் பணம் இல்லாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கம், பொங்கல் தொகுப்புடன் வழங்க அரசு முன்வரவேண்டும்.