திருமங்கலம் : பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல், மறுநாள் 15ம் தேதி மாட்டுப்பொங்கல், தொடர்ந்து 16ம் தேதி காணும் பொங்கல் வருகிறது. இதில் மாட்டுப்பொங்கல் அன்று ஏராளமானோர் இறைச்சி எடுப்பது வழக்கம்.
இதனையொட்டி திருமங்கலம் ஆட்டுச்சந்தை நேற்று பொங்கல் ஸ்பெஷல் ஆட்டுச்சந்தையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு துவங்கி காலை 11 மணிவரையில் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமானோர் ஆடுகளை வாங்க வாடகை வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் கட்டுக்கடங்காக கூட்டம் சந்தையில் காணப்பட்டது. ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் எடையை பொறுத்து ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். நேற்று பொங்கலையொட்டி நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்கு மேல்தான் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டும் பக்கத்து மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
காலை முதல் நடைபெற்ற சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கிடா வெட்டுவது வழக்கம் என்பதால் ஏராளமானோர் மொத்தமாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர். ஆட்டுச்சந்தையையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சந்தை அருகே கோழிகள் விற்பனையும் சிறப்பாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை காட்டிலும் இந்தாண்டு ஆடுகள் விற்பனை சற்று குறைவாகவே உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தபின் ஆட்டின் விலை குறையும்’’ என்றனர்.
The post பொங்கல் பண்டிகைக்கு செம சேல்ஸ் திருமங்கலம் வாரச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.