பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் வருகின்ற 9ம்தேதி முதல் 16ம்வரை சிறப்பு சந்தை

1 day ago 2

அண்ணாநகர்: வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 3 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 9ம் தேதி நள்ளிரவு முதல் 16ம் தேதி வரை சிறப்பு சந்தை அமைத்து தரப்படும் என்று அங்காடி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு சந்தை அமைப்பதற்கான வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகம் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்படும் சிறப்பு சந்தையில் மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து சீர்செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையில் பிரச்னை வராமல் இருக்க சிறப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளோம். எனவே, சிறப்பு சந்தைக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கரும்பு போன்ற பொருட்களை இறக்கி வியாபாரம் செய்துகொள்ளலாம். போக்குவரத்து பாதிக்கும் வகையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு சந்தைக்கு தேவையான உதவிகளை அங்காடி நிர்வாகம் அலுவலகத்தில் வியாபாரிகள் முறையிடலாம்’ என்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் கூட்டத்தை பயன் படுத்தி குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தவும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் கூடுதல் போலீசார் நியமிக்கவேண்டும்’ என்றார்.

The post பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் வருகின்ற 9ம்தேதி முதல் 16ம்வரை சிறப்பு சந்தை appeared first on Dinakaran.

Read Entire Article