விருதுநகர், ஜன.8: காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி மறியலுக்கு முயன்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் புகழேந்தி, ஒருங்கிணைப்பு மாநில பொருளாளர் முனியாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் கட்டும் திட்டம், பழுது நீக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.
வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை கைவிட வேண்டும். அரசு ஊழியர்கள் குடும்பங்களை பாதுகாக்க கருணை அடிப்படை பணி நியமனங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றனர். சூலக்கரை போலீசார் மறியலுக்கு முயன்ற 5 பெண்கள் உட்பட 71 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
The post காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் மறியல் appeared first on Dinakaran.