பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப இன்று 3,412 பஸ்கள் இயக்கம்: 4,302 பேருந்துகள் நாளை இயக்கம்

2 weeks ago 3

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப இன்று 3,412 பேருந்துகளும், நாளை 4,302 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிக்கைக்காக இந்த ஆண்டு 10,11,12,13 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 8.73 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு திரும்ப 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 5 நாட்களூக்கு கூடுதலாக 12,216 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 800 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 900 பேருந்துகளும் இயக்கப்பட்டது. ஜன.16ம் தேதி பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 900 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 1,082 பேருந்துகளும் இயக்கப்பட்டது.

நேற்றைய தினம் சென்னையில் இயல்புநிலை மெல்ல திரும்ப தொடங்கியது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் 19ம் தேதி வரை விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் இன்றும், நாளையும் மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்பதால் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 1,320 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 1,707 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. நாளை சென்னைக்கு கூடுதலாக 2,210 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 3,237 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

* 72,000 பேர் முன்பதிவு
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப இன்றும், நாளையும் அரசு பேருந்துகளில் 72 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

* மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 982 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, ஜன.19ம் தேதி பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மா.போ. கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஜன.20ம் தேதி அன்று கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பாக்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து. மேலும், 19ம் தேதி பிற்பகல் முதல் 20ம் தேதிவரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப இன்று 3,412 பஸ்கள் இயக்கம்: 4,302 பேருந்துகள் நாளை இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article