பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

9 hours ago 2

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.இதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வருகிற பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் பெரியார், அண்ணா, கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம். உலகம் முழுமையும் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும். தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், கனிகள், மலர்கள் வைத்து இறைவனை வணங்கி நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியாக வாழட்டும்.

* சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன்: சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.

* சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

* புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: இயற்கை அன்னை,நமக்கு குடிநீருக்கும்,விவசாயத்திற்கும் தேவையான அளவு மழையை பொழிந்து நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி நிற்காத தன்னிறைவுக்காண அருள வேண்டும்.

* பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன்: அண்டை வீட்டார்களுடன் அன்பை பகிர்ந்து தங்கள் இல்லங்களில் செய்த பலகாரங்களை பகிர்ந்து உண்டு ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

* இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: வண்ணமயமாய் வாழ்க்கை மலரட்டும். வெறும் வாழ்த்துகள் மட்டும் நம்மை வாழவைத்து விடாது; நிச்சயம் நம் விடாமுயற்சியும், பயிற்சியும், உழைப்பும் நிச்சயம் நல்லதோர் வளத்தை, நலத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கியத்தை வாழ்க்கையாய் மாற்றி காட்டுவோம். வலிகள் எல்லாம் மறைந்து; நிச்சயம் வழிகள் பிறக்கட்டும். அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

* தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார்: தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளும் பிறக்க இருக்கிறது. உலகிற்கு உணவு படைக்கும் விவசாயிகளைப் போற்றிட, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை மதித்திட, இயற்கையை துதித்திட இப்படி உயர்ந்த நோக்கோடு எடுக்கக்கூடிய பெருவிழா தான் பொங்கல். இந்த தமிழ்ப் புத்தாண்டில் அனைவரும் இதனை உறுதி ஏற்றிட தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

* தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம்: பருவம் தவறி பெய்யும் மழையாலும் இயற்கை சீற்றங்களாலும் விவசாயம் பாழ்பட்டு போய்விடுகிறது. அப்படியே தப்பி தவறி விளைந்தாலும் உற்பத்திகேற்ப விலை நிர்ணயம் இல்லை. இந்நிலை என்று மாறுகிறதோ அந்த நாள் விவசாயிகளின வாழ்வில் மட்டுமல்ல அனைவருடையை வாழ்விலும் மகிழ்ச்சி தான். விவசாயிகள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சியும் பொங்கிட அனைவரும் பொங்கல், உழவர் திருநாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம். அனைவருக்கும் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

* தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் ராமசந்திரன்: அல்லவை தேய, நல்லவை பெருக, அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

* விஜய் வசந்த்: வண்ண கோலம் போல் வண்ணமயமான வாழ்க்கை, பொங்கி வழியும் இன்பம் என்றும் உங்கள் வாழ்வில் நிறைந்திட வாழ்த்துகிறேன். எல்லா வளமும் பெற்று அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

* தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேமநாராயணன்: தித்திக்கும் கரும்பை போல அனைவருடைய வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் என்றும் இனிக்கட்டும்.

* கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர்: பொங்கல் திருநாளில் முன்னோர்களின் கலாசாரத்தை பேணிகாத்து இந்த தைத்திருநாளை அனைவருக்கும் ஆனந்தத்தோடு கொண்டாடுவோம்.

இதே போல் விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சரத்குமார், இந்திர குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி, தேசிய நாடார் சங்கம் பொதுச்செயலாளர் விஜயகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர் ராகம் செளந்திர பாண்டியன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article