சென்னை,
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், 17.01.2025 அன்று 28,022 பயணிகளும். 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.