சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரிகள் படிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாட படையெடுத்துச் செல்கின்றனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கடந்த 3 தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்கள், ரெயில்கள் மற்றும் விமானங்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் பயணத்திற்காக தமிழ்நாடு அரசும் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது, ரெயில்களில் அனைத்து டிக்கெட் முன்பதிவுகளும் நிரம்பி விட்டதால், அரசு பஸ்களில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதில் நேற்று (ஜன.12-ம் தேதி) ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணித்த நிலையில், இன்று 3,461 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.