பைக் மோதியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை: பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது

2 hours ago 1

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பைக் மோதியதைத் தட்டிக் கேட்ட கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா (29). வணிக கப்பலில் மாலுமியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்றிரவு மரடோனா, அவரது நண்பர் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பவுல் மகன் கிளிட்டஸ் (28) என்பவருடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி திரேஸ்புரம் கடற்கரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகரைச் சேர்ந்த மாடசாமி மகன் மதன்குமார் (28), அவரது நண்பர்கள் ஸ்ரீதர், ரிட்சன் உள்ளிட்டோர் மது அருந்திவிட்டு கடற்கரையிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

இருவரும் நேருக்கு நேர் வந்தபோது மதன்குமாரின் பைக், கிளிட்டசின் பைக்கை தட்டியதால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடற்கரைக்கு சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த மதன்குமார் தரப்பினர் மரடோனாவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைத் தடுத்த நண்பர் கிளிட்டசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் மரடோனா மயங்கி சரிந்துள்ளார். இதனையடுத்து மதன்குமார் கும்பல் பைக்கில் தப்பியோடி விட்டது.

பின்னர் மரடோனாவை மீட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் விருதுநகர் பகுதியில் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கிளிட்டஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், வடபாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பிரபல ரவுடியான தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த சாமுவேல் என்ற மாடசாமி மகன் அப்புலு என்ற மதன்குமார்(28), அவரது நண்பரான அலங்காரதட்டைச் சேர்ந்த ஜேசு அந்தோணி மகன் ஸ்டீபன்(20), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ராபின்சன் மகன் ரிட்சன்(21) மற்றும் திரேஸ்புரம் சிலுவையார் கோயில் குமார் மகன் ஆலன்(21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்டுள்ள மதன்குமார் மீது தாளமுத்துநகர் போலீசில் கொலை, வடபாகம் போலீசில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடபாகம் போலீஸ் நிலைய ரவுடி லிஸ்ட்டிலும் மதன்குமார் இடம் பெற்றுள்ளார். தப்பியோடி மதன்குமார் கூட்டாளிகள் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பைக் மோதியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை: பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article