போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் வழக்கில் 30 ஏஜென்ட்களை பிடிக்க தனிப்படை அமைப்பு: சென்னை, கன்னியாகுமரியில் முகாம்

3 months ago 9

புதுச்சேரி, பிப்.7: போலி என்ஆர்ஐ சான்றிதழ் வழக்கில் 30 ஏஜென்டுகளை பிடிக்க தனிப்படையினர் சென்னை, கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படும். எம்பிபிஎஸ் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மற்றும் என்ஆர்ஐ ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 116 எம்பிபிஎஸ் சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் பலர் ஏஜென்ட் மூலமாக போலியான வெளிநாடு தூதரக ஆவணங்களை தாக்கல் செய்து என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீடு மருத்துவ இடங்களை பெறுவதாக புகார் எழுந்தது. மருத்துவ சேர்க்கைக்கு கொடுத்த ஆவணங்களை பரிசோதித்தபோது 74 ஆவணங்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 74 மாணவர்களுக்கு வழங்கிய எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இந்த மோசடியை கண்டறிந்த சென்டாக் ஒருங்கிணைப்பாளர் கடந்த செப்டம்பர் மாதம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடி வழக்கு பதிந்து ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தூதரகம் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்த ஏஜென்டுகளான ஆந்திர மாநிலம் குண்டூர் மெட்டி சுப்பாராவ், தேனி மாவட்டம் பூமிநாதன், செல்வகுமார், கார்லோஸ் சாஜிவ், விநாயகம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் வெளிநாடு தூதரக போலி ஆவணங்கள் கன்னியாகுமரியை தலைமை இடமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் தயாரித்து கொடுத்துள்ளது தெரியவந்தது. இந்த 30 ஏஜென்ட்களையும் கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை கார்த்திகேயன் தலைமையில், 2 குழுக்களாக பிரிந்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இவர்கள் தற்போது சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் வழக்கில் 30 ஏஜென்ட்களை பிடிக்க தனிப்படை அமைப்பு: சென்னை, கன்னியாகுமரியில் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article