பேரையூர்: பேரையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வயல்களில் நாற்று நடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சமீபத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, அத்திபட்டி, சின்னக்கட்டளை, அல்லிகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் அட்சயா, பால்ஒட்டு உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தற்போது நடவு பணிகளை துவக்கியுள்ளோம். நாங்கள் நடவு செய்யும் அட்சயா மற்றும் பால்ஒட்டு போன்ற ரகங்கள் அதிக விளைச்சல் தரும். விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில், உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது என மாவட்ட கலெக்டர் கூறினார். விவசாயிகள் பயன் பெறும் வகையில் தரமான உரங்களை உரிய நேரத்தில் வழங்குவதுடன், வேளாண் அதிகாரிகள் ஆலோசனைகள் தர வேண்டும். இதனால் அறுவடை நேரத்தில் அதிக லாபம் பெறலாம், மேலும் பயிர்களில் களை எடுக்க ஆட்கள் கிடைக்காமல் உள்ளது. இதனால் பலரும் விவசாய பணிகளை தொடங்காமல் உள்ளனர்’’ என்றனர்.
The post பேரையூர் பகுதியில் நாற்று நடும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.