'பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' - அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்

3 months ago 19

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆலோசனைக் கூட்டம் போட்ட வரலாறு இருக்கிறதா? என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் முதல்-அமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். அவர் பத்திரிகைகளையும் படிப்பதில்லை, தொலைக்காட்சிகளையும் பார்ப்பதில்லை என்பது அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அன்றைக்கு நடந்தது தமிழ்நாடு முழுமைக்கான ஆலோசனைக் கூட்டம்.

அதில்தான் "பருவ மழையை எதிர் கொள்ள முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்" என முதல்-அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் செய்தி ஊடகங்களில் வெளியானது.

அன்றைக்கு முதல்-அமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர். புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார்.

அதே போன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போது சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் முதல்-அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார். ஆலோசனைக் கூட்டம் நடத்தாமல் போயிருந்தால் 'ஆலோசனைக் கூட்டத்தைக்கூட ஏன் நடத்தவில்லை?' என பழனிசாமி பொங்கியிருப்பார். அ.தி.மு.க. ஆட்சியில் இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆலோசனைக் கூட்டம் போட்ட வரலாறு இருக்கிறதா? வரலாறு இல்லாதவரின் வயிற்றெரிச்சல்தான் இந்த அறிக்கை!

பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா? என காத்திருக்கிறார் பழனிசாமி. 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து அதனை மொத்தமாக திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்து 289 பேர் உயிரிழந்தார்கள். '2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு மனித தவறே காரணம். தனியார் நிலத்தை பாதுகாக்கவே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது' என சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே குறிப்பிட்டார்கள். அப்படியான எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முதல்-அமைச்சர் ஆய்வுக் கூட்டம் போட்டால், 'எதற்காக ஆலோசனைக் கூட்டம்' எனக் கேட்கும் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்."

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

Read Entire Article