பேரவைத்தலைவருடன் எடப்பாடி கடும் வாக்குவாதம்; காவி உடை அணியாமல் கருப்புச்சட்டை அணிந்து வந்தது மகிழ்ச்சி: வெளிநடப்பு செய்த அதிமுகவினரை கலாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 week ago 2

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேமில்லா நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முயன்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசி முடித்ததும் பேச அனுமதி கொடுக்கிறேன் என்றார்.

எடப்பாடி பழனிசாமி: பா.ம.க உறுப்பினர் பேசட்டும், ஆனால், பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: காலை 9.30 மணிக்கு தான் என்னை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தீர்கள். அதனால் ஜி.கே.மணிக்கு ெகாடுத்து விட்டு உங்களுக்கு பேச அனுமதி தாரேன். (அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்குமாறு கோஷம் எழுப்பினர்)

எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அது தான் மரபு.
சபாநாயகர் அப்பாவு: சட்டப்பேரவைக்கு ஒரு நோக்கத்துடன் தான் வந்துள்ளீர்கள். (அப்போதும் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்).

எடப்பாடி பழனிசாமி: எங்களை வெளியேற்றும் வகையில் தான் சபாநாயகர் செயல்படுகிறார்.
சபாநாயகர் அப்பாவு: நான் அவ்வாறு ெசயல்படவில்லை. 9.20 மணிக்கு தான் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று சொன்னீர்கள். ஜி.கே.மணி அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக பேச உள்ளார். 2 நாட்களாக அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பேசியதும் அனுமதி தருகிறேன்.

அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவருக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பேச அனுமதி கொடுங்கள்.
எடப்பாடி பழனிசாமி: சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மக்களின் பிரச்னையை எடுத்து சொல்ல வேண்டியது கடமை. அதன்படி அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பில் பேசும்போது, நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. அதிமுக உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து பேசியது நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. எங்களை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள். சபாநாயகர் இப்படி ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் இதை நாங்கள் யாரிடம் முறையிடுவது.

சபாநாயகர் அப்பாவு: தவறான வார்த்தைகள் பதிவானால் எதிர்மறை பிரச்னைகள் வரும். கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் யாரையும் இதுவரை புறக்கணித்ததாக புகார் எழவில்லை. முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் போது, அது முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் உறுப்பினர் கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் போது, முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஆளும் கட்சி, தோழமைக் கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பில் பேசுகையில், நேரடி ஒளிபரப்பு செய்வதாக கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். அமைச்சர்களின் பதில்கள் மட்டும்தான் நேரடியில் ஒளிபரப்பு செய்யப்படும். விரைவில் அனைத்தும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம். அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவையில் உறுப்பினர் பேசும் வார்த்தைகள் சமூகத்தில் அமைதியையும், நன்மையும் கொடுக்க வேண்டும். உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார். அதை எப்போது யாரை வைத்து வழங்க வேண்டும் என ஆலோசித்து வருகிறோம். முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சொன்னதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 4 ஆண்டு காலம் தான் முடிந்துள்ளது. இன்னும் ஓராண்டு காலம் உள்ளது.
துரைமுருகன்: இந்த அவையில் சட்டப் பேரவை தலைவர் சொல்வதுதான் தீர்ப்பு, வானளாவிய அதிகாரம் உண்டு. எதிர்க்கட்சி தலைவர் இந்த பிரச்னை இத்தோடு விட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி: எங்கள் உரிமையை பறிக்கிறீர்கள். எங்களை வெளியேற்றி விட்டு முதல்வர் எங்களை விமர்ச்சிக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டது மகிழச்ச்சி. நல்லவேளை காவி உடையை அணிந்து வராமல், கருப்பு சட்டையில் வந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் அப்பாவு: எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு அதற்கு பதிலும் வாங்கி விடுகிறார். பின்னர் வெளிநடப்பு செய்வது தான் வேடிக்கையாக உள்ளது.

The post பேரவைத்தலைவருடன் எடப்பாடி கடும் வாக்குவாதம்; காவி உடை அணியாமல் கருப்புச்சட்டை அணிந்து வந்தது மகிழ்ச்சி: வெளிநடப்பு செய்த அதிமுகவினரை கலாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article