பேரவை தேர்தல் பின்னடைவுக்கு மத்தியில் ஏப்ரல் 8, 9ல் காங். செயற்குழு கூட்டம்: அகமதாபாத்தில் நடக்கிறது

2 hours ago 1

புதுடெல்லி: கடந்த 1924ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் ஏப்ரல் 8, 9ம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் மிக்க கூட்டம் இது என்பதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘அகமதாபாத் செயற்குழு கூட்டமானது, காங்கிரஸ் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்கும் நிகழ்வாக மட்டும் இருக்காது.

சாமானிய மக்கள் தினம்தோறும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு காண்பது, தேசம் குறித்த தீவிரமான மாற்று சிந்தனையை முன்னெடுப்பதாக இருக்கும். ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின்மீது நாள்தோறும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை இக்கூட்டம் ஒருங்கிணைக்கும். காங்கிரஸ் கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துடன், தேசிய அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

இரு கூட்டங்களுக்கும் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிப்பார். கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், தேசிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடந்து முடிந்த மகாராஷ்டிரா, அரியானா, டெல்லி சட்டப் பேரவை தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் மேற்கண்ட செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பேரவை தேர்தல் பின்னடைவுக்கு மத்தியில் ஏப்ரல் 8, 9ல் காங். செயற்குழு கூட்டம்: அகமதாபாத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article