கடலூர் அருகே பயங்கர விபத்து பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி: அக்கா, தம்பியும் உயிரிழந்த சோகம்: ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிய கேட்கீப்பர் கைது

3 hours ago 1

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் அக்கா, தம்பி உட்பட 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த டிரைவர் உள்பட மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிய கேட் கீப்பரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி நேற்று காலை பாசஞ்சர் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில், கடலூர் முதுநகரில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது. அப்போது, கடலூர் முதுநகர் அருகே உள்ள செம்மங்குப்பம் என்ற பகுதியில் ரயில்வே கேட்டை 7.30 மணியளவில் கடந்து செல்லும்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அப்போது அந்த வேன் மீது ரயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் பள்ளி வேன், சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டதில் ரயில்வே மின்கம்பம் மீது மோதியதில் பள்ளி வேன் சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்தது. மேலும் மின்கம்பமும் உடைந்து விழுந்தது. இதனால் விபத்துக்குள்ளான வேன், எலும்பு கூடுபோல் கிடந்தது.
இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த கடலூர் முதுநகர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த நிமலேஷ் (12), தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரர் விஸ்வேஷ் (16) மற்றும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்ன காட்டுசாகை பகுதியை சேர்ந்த சாருமதி (16), அவரது சகோதரர் செழியன் (15), வேன் டிரைவர் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சங்கர் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்க ஓடிச்சென்ற செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அண்ணாதுரை (55) மீது மின்சாரம் வயர் விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தார்.

இதனிடையே ரயில் விபத்தின்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் தண்டவாள பகுதிக்கு ஓடோடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மாணவி சாருமதி பரிதாபமாக உயிரிழந்தார். 10ம் வகுப்பு மாணவன் விஸ்வேஷ், டிரைவர் சங்கர் மற்றும் அண்ணாதுரை உள்ளிட்டோர் கடலூரில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து, செழியன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செழியனும் சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் இறந்த மாணவர்களில் நிமலேஷ் 6ம் வகுப்பும், சாருமதி பிளஸ்1 ம், அவரது தம்பி செழியன் 10ம் வகுப்பும் பயின்று வந்தனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார், சிதம்பரம் ரயில்வே போலீசார் தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரம் சரக டிஐஜி உமா நேரில் விசாரணை மேற்கொண்டார். பதற்றம் நிலவுவதால் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என நூற்றுக்கணக்கான போலீசார் செம்மங்குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மக்களின் போராட்டத்தால் ரயில்வே கேட்டை பூட்டாமல் தூங்கிய கேட் கீப்பர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 105 (குற்றமற்ற கொலை), 106 (அலட்சியமாக செயல்பட்டு மரணத்துக்கு காரணமாதல்), 125A (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்), 125B (உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலட்சியமாக செயல்படுதல்), இந்திய ரயில்வே சட்டம் 150 உள்ளிட்ட 5 சட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


* ரயில்வே கேட் கீப்பர் மீது மக்கள் சரமாரி தாக்குதல்

விபத்து நடந்த ரயில்வே கேட்டில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பர் பணியில் இருந்துள்ளார். அவர் ரயில் வரும்போது கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்டதால்தான், இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தகவல் பரவியது. ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் திரண்டு வந்து பங்கஜ் சர்மாவை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குவந்த போலீசார் பங்கஜ் சர்மாவை மீட்டு பாதுகாப்பாக கேட் கீப்பர் அறையில் தங்க வைத்தனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து அவரை வெளியே இழுத்துவர முயற்சி செய்தனர்.

போலீசார் அனுமதி மறுத்ததால் அவரது அறையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ரயில்வே கேட்கீப்பர் அறையை முற்றுகையிட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு கேட்கீப்பர் பங்கஜ் சர்மா போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கேட் திறந்துதான் இருந்தது ரயிலில் ஒலி எழுப்பவில்லை: காயமடைந்த மாணவன்

படுகாயமடைந்த 10ம் வகுப்பு மாணவன் விஸ்வேஷ் கூறுகையில், ‘நான் தொண்டமாநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். தினமும் எனது சகோதரர் 6ம் வகுப்பு படிக்கும் நிமலேஷ் உடன் கடலூரில் உள்ள பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஒன்றாம் வகுப்பு முதல் ஒரே பள்ளியில் படித்து வருகிறோம். வழக்கம்போல் இன்று (நேற்று) பள்ளிக்கு புறப்பட்டோம்.  வேனில் என்னுடன் முதல்கட்டமாக வரும் 2 நண்பர்களும் வந்தனர். செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்கும்பொழுது ரயில்வே கேட் திறந்து இருந்தது. ஆனால் ரயில் வரும் எந்த சத்தமும் கேட்கவில்லை. ரயிலும் எந்த ஒலியும் எழுப்பவில்லை. ரயில் மோதிய பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை’ என்றார்.

* ரயில்வே விதியை மீறிய கேட்கீப்பர் சஸ்பெண்ட்

விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று (நேற்று) காலை சுமார் 7.45 மணியளவில், மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கடலூர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 170 யை (இன்டர்லாக் செய்யப்படாத மனிதர்கள் கொண்டு இயக்கபப்டும் கேட்) கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில், வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிவாரண ரயில் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரயில்வே மேலாளர் (டி. ஆர். எம்) மற்றும் கிளை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது, ​​வேன் ஓட்டுநர் கேட்டைக் கடக்க அனுமதிக்குமாறு வற்புறுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேன் ஓட்டுநர் வற்புறுத்தியதால், கேட் கீப்பர் கேட்டைத் திறந்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி அவர் கேட்டைத் திறந்திருக்கக்கூடாது. கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் முழுமையாக பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை ரயில்வே மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், தேவைப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2.5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் ரயில்வே மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கேட்டை நான் திறக்க சொல்லவில்லை: பள்ளி வேன் டிரைவர்

விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் டிரைவர் சங்கர் (47) கூறும்போது, ‘15 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியில் வேன் ஓட்டுனராக இருந்து வருகிறேன். தினமும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று, பின்னர் வீடுகளுக்கு சென்று விடுவேன். வழக்கம்போல் தொண்டமாநத்தம், சின்ன காட்டு சாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 மாணவர்களை முதல் கட்டமாக ஏற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டை கடக்கும்போது கேட் திறந்திருந்தது.

இதனால் ரயில் சென்று இருக்கலாம் என நினைத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தேன். தண்டவாளத்தை கடக்கும்போது எந்தவிதமான சத்தமும், ரயில் சத்தமும் இல்லை. ஆனால் அதற்குள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நேர்ந்தது. கேட் கீப்பரை திறப்பதற்கு நான் வலியுறுத்தவில்லை. கேட் திறந்திருந்ததால்தான் தண்டவாளத்தை கடந்து சென்றேன்’ என்றார்.

* 95 கிமீ வேகத்தில் வந்த ரயில்

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் கூறுகையில், ரயில் சுமார் 95 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை திறந்து விட்டதால் விபத்து நடந்துள்ளது. பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதால் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

* சோகத்தில் மூழ்கிய செம்மங்குப்பம்

விபத்து நடந்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை தினமும் பள்ளி வானங்கள், இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் பஸ்கள் உள்ளிட்டவை கடந்து செல்வது வழக்கம். சில தனியார் பஸ்களும் இப்பகுதி வழியாகத்தான் செல்லும். அதிகளவு போக்குவரத்து கொண்ட இந்த பகுதியில் நேற்று நடந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். அவர்கள் கூறுகையில், தானியங்கி ரயில்வே கேட்டுகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே அனைத்து ரயில்வே கேட்டுகளையும் தானியங்கி ரயில்வே கேட்டுகளாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

* தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: எஸ்பி ஜெயக்குமார்

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ‘விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். காயமடைந்தவரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதன் முடிவில்தான் விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். தண்டவாளத்தில் எலக்ட்ரிக் மின்வயர்கள் முழுவதும் அறுந்து கிடக்கிறது. அதை சீரமைக்கும் வேலைகளும் முழுமையாக நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை முடிவில் உண்மை தெரியவரும். கேட் கீப்பர் குடிபோதையில் இருந்தாரா? என்ற யூகத்துக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது,’ என்றார்.

* தமிழ் தெரியாத கேட்கீப்பர் கேட்டை பூட்டாமல் தூங்கியதால் விபத்து: வாலிபர்கள் குமுறல்

செம்மங்குப்பத்தைச் சேர்ந்த பாலாஜி (27) என்பவர் கூறுகையில், ‘வேன் டிரைவர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் கேட்டை அவர் திறந்ததாக கூறுவது பொய். வழக்கமாக அவசரத்துக்கு கூட யாராவது கேட்டாலும் பங்கஜ் சர்மா கேட்டை திறக்க மாட்டார். அவரின் அலட்சியத்தாலே இந்த சம்பவம் நடந்துள்ளது. சுரங்க பாதை அமைத்துக் கொடுத்தால் சிரமமின்றி நாங்கள் சென்று வருவோம்’ என்றார்.

கிருஷ்ணராஜ் (35) என்பவர் கூறும்போது, ‘கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அடிக்கடி கேட்டை பூட்டிவிட்டு ரயில் வரும் வரை கடைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல கேட்டை பூட்டிவிட்டு செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார். நேற்று அவர் கேட்டை பூட்டாமல் தூங்கியதால் விபத்து நடந்துள்ளது. பங்கஜ் சர்மா மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாது. எனவே தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும்’ என கூறினார்.

* மகன், மகளை இழந்த பெற்றோர் கதறல்

கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்ன காட்டுசாகை பகுதியை சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (பிளஸ்1), மகன் செழியன் (10ம் வகுப்பு) இருவரும் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இத்தகவலை கேட்டு சக மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனிடையே சாருமதியின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையிலும், செழியன் உடல் ஜிப்மரிலும் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகள், மகனின் உடலைப்பார்த்து பெற்றோர் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

* அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

ரயில் விபத்தில் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் மற்றும் டிரைவரை அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதேபோல் திமுக எம்எல்ஏக்கள் ஐயப்பன், சபா.ராஜேந்திரன், மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்டோரும் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்து தொடர்பாகவும் அதிகாரிகளிடம் விசாரித்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தியதோடு, மீட்பு பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

* முழுமையான விசாரணை: கலெக்டர்

வேன் மீது ரயில் மோதிய இடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்து குறித்து கலெக்டர் கூறுகையில், ‘கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் துரதிர்ஷ்டவசமாக தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த டிரைவர் உட்பட 3 பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேட் கீப்பரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். ரயில்வே துறைக்கும் விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளேன். முழுமையான விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

* டாக்டர், ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்டனர்: உறவினர் உருக்கம்

கடலூர் ரயில் விபத்தில் அக்கா சாருமதி, தம்பி செழியன் இருவரும் பலியாகினர். 2 உயிர்களை பறிகொடுத்த துக்கத்தில் இருந்த உறவினர் செல்வகுமாரி கூறும்போது, ‘விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள திராவிட மணியின் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி படிப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் குழந்தைகளுக்காக செய்து கொடுத்தார். மாணவி சாருமதி பள்ளி படிப்பில் சுட்டி. 10ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்றிருந்த நிலையில் 12ம் வகுப்பு முடித்தவுடன் டாக்டர் ஆவேன் என எங்களிடம் பெருமையோடு சொல்வார்.

செழியன் அக்காவை போன்று நன்றாக படிக்க வேண்டுமென கூறிக் கொண்டிருப்பான். ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்டான். இப்படி தங்கள் படிப்பிற்காக கிராமத்தில் இருந்து நகருக்கு சென்று வந்த நிலையில் ரயில் மோதிய விபத்தில் இருவரும் பலியான தகவலை கேட்டு துடிதுடித்து போனோம். கனவில் கூட இதுபோன்று சம்பவம் நடைபெறும் என நினைத்து பார்க்கவில்லை என கண்ணீர் மல்க கூறினர். இதேபோல் மற்ற உறவினர்களும் கதறி அழுதனர்.

* நடந்தது என்ன? காப்பாற்ற முயன்று காயமடைந்தவர் அதிர்ச்சி தகவல்

விபத்தை நேரில் பார்த்த செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகில் குடியிருக்கும் அண்ணாதுரை(55) கூறியதாவது: செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் வசித்து வருகிறேன். வழக்கம்போல் காலை வேளையில் பள்ளி வாகனங்கள் கடந்து செல்வதுண்டு. காலை 7.40க்கு இந்த ரயில் எங்கள் பகுதி ரயில்வே கேட்டை கடந்து செல்லும். வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது திடீரென ‘டமால்’ என மிகப்பெரிய சத்தம் கேட்டு அதிர்ந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் வேன் வீசப்பட்டது. உடனே பள்ளி குழந்தைகளை காப்பாற்றலாம் என ஓடிச்சென்றேன். அப்போது மின் கம்பம் மீது வேன் மோதியதால் திடீரென என் மீது மின்சார கம்பம் ஒன்று சாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். வேன் கடந்தபோது கேட் திறந்த நிலையில்தான் இருந்தது என்றார்.

* கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: ரயில்வே பொது மேலாளர்

விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கேட் கீப்பரின் அலட்சியப் போக்கே இந்த விபத்துக்கு முக்கிய காரணம். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை சிதம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் தானியங்கி ரயில்வே கேட்டுகள் அமைக்கப்படுவது நடைமுறை. போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள ரயில்வே கேட்டுகளில் தானியங்கி ரயில்வே கேட்டுகள் அமைக்கப்படுவதில்லை. அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்தும் தானியங்கி ரயில்வே கேட்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகளில் தண்ணீர் தேங்காத இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த இடங்களில் சுரங்க பாதை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

* 6 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து காரணமாக பல ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிற்கும் சூழல் ஏற்பட்டது. திருச்சி-தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 5.30க்கு திருச்சியில் புறப்பட்ட நிலையில் காலை 8.10 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் விபத்தால் சிக்னல் கிடைக்காததால் இந்த ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திலே 6 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். கைக்குழந்தையோடு வந்தவர்கள் உணவு கொடுக்க முடியாமல் தவித்தனர்.மேலும், செம்மங்குப்பம் ரயில்வே பாதை சரி செய்தவுடன் சிறப்பு ரயிலாக திருச்சிராப்பள்ளி தாம்பரம் விரைவு ரயில் அனுப்பி வைப்பதாக அறிவிப்பு மட்டும் தெரிவித்து வந்தனர். நீண்டநேரம் காத்திருந்து விரக்தியடைந்த ஒரு சில ரயில் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி பேருந்தில் பயணிக்க நடந்து சென்றனர். மைசூரிலிருந்து கடலூர் ஓடி துறைமுகம் வரை செல்லும் ரயில் வண்டி ஆலப்பாக்கம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

சீர்காழி ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. இதுதவிர விழுப்புரம் – மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கப்படும் சோழன் உள்ளிட்ட மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமானது. சீரமைப்பு முடிந்த நிலையில் பனாரஸ்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழித்தடத்தை கடந்து சென்றது. பின்னர் 12.50 மணியளவில் திருச்சி-தாம்பரம் விரைவு வண்டி புறப்பட்டு சென்றது. தொடர்ந்து அந்த வழித்தடத்தில் அடுத்தடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது.

* பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நடந்த மோசமான ரயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும். மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த அந்தத் துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத் துயரில் ஆழ்த்துகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தாவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

* துணை முதல்வர் இரங்கல்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மாணவ – மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது. இந்த விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதல்வரின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

The post கடலூர் அருகே பயங்கர விபத்து பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி: அக்கா, தம்பியும் உயிரிழந்த சோகம்: ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிய கேட்கீப்பர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article