பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே இன்று அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்து பயிர்களையும், 2 மின்வேலி கம்பங்களையும் சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கிராமங்களுக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். அதேபோல் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், கோட்டையூர் கிராமத்தில் தங்கவேலு என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்கள், வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 மின்கம்பங்களையும் உடைத்து சேதப்படுத்தியது.
இந்நிலையில் தங்கவேலு இன்று அதிகாலை தனது நிலத்திற்கு சென்றபோது அங்கு யானைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் நீண்ட நேரம் போராடி விரட்டியடித்தனர். இதையடுத்து இன்று காலை வனவர் முரளி, விஏஓ தனசேகரன் உள்ளிட்டோர் சேதமான விவசாய நிலத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதமான பயிர்களுக்கு அதிகாரிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும். அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதையும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை நிரந்தரமாக தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
The post பேரணாம்பட்டு அருகே அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்: சோளம், வாழைபயிர்கள், மின்கம்பம் சேதம் appeared first on Dinakaran.