*மீட்கப்பட்ட 2 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை
பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே நிலக்கடலை பறிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்ட மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கவரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(30). சென்னையில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி சங்கீதா(25). மகன் அதியமான்(5), மகள் இசைப்பிரியா(2). பிரேம்குமார் சென்னையிலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.
வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களின்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாம். அதேபோல் ஆயுதபூஜை விடுமுறையொட்டி பிரேம்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார். தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் பிரேம்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.தொடர்ந்து அதிகாலை 6 மணியளவில் சங்கீதா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அதே பகுதியில், அவரது மாமனார் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில் நிலக்கடலை பறிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் சங்கீதா குழந்தைகளுடன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாமனார் நாராயணசாமி(64), இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் குதித்து சிறுமி இசைப்பிரியாவை மீட்டனர். சங்கீதாவை மீட்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் அதியமான் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர்(பொறுப்பு) சிவச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் அதியமானை தேடினர். சுமார் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, பல மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் அதியமானின் சடலத்தை மீட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுமி இசைப்பிரியா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு சப்-இன்ஸ்ெபக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதா, அதியமானின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த சங்கீதாவின் தந்தை சீனிவாசன்(57) கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பேரணாம்பட்டு அருகே அதிகாலை சோகம் நிலக்கடலை பறிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தாய், மகன் பலி appeared first on Dinakaran.