'பேசி பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம் தி.மு.க.' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 months ago 13

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கிய பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டவர்களை பார்க்கும்போது நான் அளவில்லாத பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த பேச்சுப்போட்டி 3 வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மட்டும் நடத்தப்பட்டது அல்ல. தி.மு.க.வின் கருத்தியலை அடுத்த நூற்றாண்டுக்கு சுமந்து செல்லப்போகிற பேச்சுப் போராளிகளை கண்டறிவதற்காக நடத்தப்பட்டது.

அவர்களை பட்டை தீட்டும் பயிற்சி பட்டறையை நான் கட்டி எழுப்பிய இளைஞர் அணி நடத்திக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான். நமது இயக்கத்தை பார்த்து பேசி பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம் தி.மு.க. என்று சொல்வார்கள். நாம் பேசிய பேச்செல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.

உலகம் முழுவதும் நடந்த புரட்சிகளின் வரலாறுகளை பேசினோம். அறிஞர்களைப் பற்றியும், நாட்டில் நடந்த கொடுமைகளைப் பற்றியும், பிற்போக்குத்தனங்கள் பற்றியும் பேசினோம். பட்டுக்கோட்டை அழகிரி, ரத்தம் கக்கிய நிலையிலும் இந்த சமுதாயத்தின் இழிவு நீங்க வேண்டும் என்பதற்காக பேசினார். 95 வயதிலும் தாங்க முடியாத வலியுடன் களத்தில் இருந்து பேசியவர் தந்தை பெரியார்.

சாக்ரட்டீஸ் முதல் தமிழர்கள் மீதான டெல்லியின் பாரபட்சம் வரை அனைத்து தலைப்புகளிலும் மடைதிறந்த வெள்ளம் போல பேரறிஞர் அண்ணா பேசினார். சங்க இலக்கியங்களை பாமர மக்களுக்கு அழகு தமிழில் கலைஞர் கருணாநிதி கொண்டு சென்றார். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என பலர் தி.மு.க. இயக்கத்தின் பேச்சாளர்களாக இருந்தனர்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Read Entire Article