காஞ்சிபுரம்: பெற்றோர் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுவன் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தனபாக்கியம். இவர்கள், காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து வாத்து வளர்க்கும் தொழில் செய்துள்ளனர். இவர்களிடம் ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதியினர் கடனாக ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதனால் வாங்கிய கடனுக்காக தனது 9 வயது மகன் வெங்கடேஷை 10 மாதங்கள் வாத்து மேய்க்க முத்து-தனபாக்கியம் தம்பதி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளான். இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் முத்து, தனபாக்கியம், இவர்களின் மகன் ராஜசேகர் ஆகியோர் சிறுவனை காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில் 10 மாத குத்தகை காலம் முடிவுற்று குழந்தையை மீட்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சிறுவனின் பெற்றோர் செவிலிமேடு வந்து, எங்கள் மகன் எங்கே என கேட்டுள்ளனர். நீங்கள் வாங்கிய கடன் கழியவில்லை. இன்னும் 3 மாதங்கள் உங்கள் மகன் வேலை செய்யவேண்டும் என முத்து கூறியுள்ளார்.
மகனை பார்க்கவேண்டும் என கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த முத்துவும் அவரது மனைவியும் அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீசில் பிரகாஷ் ஏனாதி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நேற்று காஞ்சிபுரம் வந்த ஆந்திர மாநில போலீசார். முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். துருவி துருவி விசாரித்தபோது, மஞ்சள் காமாலை பாதித்து சிறுவன் இறந்துவிட்டதால் யாருக்கும் தெரியாமல் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் புதைத்துவிட்டோம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து புத்தூர் டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீசார், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய போலீசார் உதவியுடன் புதைக்கப்பட்ட சிறுவன் வெங்கடேஷ் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுவன் மஞ்சள் காமாலை நோயில்தான் இறந்தானா? வேறு காரணமா? என வெண்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரித்து வருகின்றனர். பெற்றோர் வாங்கிய கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவன், செவிலிமேடு பாலாற்றில் சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பெற்றோர் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதாக செவிலிமேடு பாலாற்றில் புதைப்பு: சடலம் தோண்டி எடுப்பு; 3 பேரை கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.