பெரும்புதூர், மே 6: பெரும்புதூர் அருகே ரூ.8 கோடியில் வெங்காடு சாலை விரிவாக்கப் பணி நடந்து வரும் நிலையில், சாலை தரம் இல்லாமல் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், வெங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. இந்த தொழில் பூங்காவில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது கனரக வாகனங்கள் மூலம், இந்த தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், பெரும்புதூர்-குன்றத்தூர் சாலை, கொளத்தூர்-மேட்டு கொளத்தூர் சாலையை இணைக்கும் வெங்காடு சாலை பயன்படுத்தி இந்த தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லபடுகிறது. தற்போது, ஒருவழி சாலையாக உள்ள இந்த வெங்காடு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரும்புதூர்- குன்றத்தூர் சாலை மற்றும் கொளத்தூர்-மேட்டுகொளத்தூர் சாலை இந்த இரண்டு சாலை இணைக்கும் வெங்காடு சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வெங்காடு சாலை அகலப்படுத்தி சீரமைக்க தமிழக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை சீரமைக்க டெண்டர் எடுத்தவர்கள், சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி, பின்னர் கிராவல் மண் கொட்டி அதனை பலப்படுத்தி வேண்டும். பின்னர், ஜல்லி கற்கள் வைத்து அதனை பலப்படுத்திய பின்பு மீண்டும் வெட்மிக்ஸ் வைத்து பலப்படுத்தி அதன் பின்னர் தார் சாலை அமைக்க வேண்டும்.
தற்போது இந்த டெண்டர் எடுத்தவர்கள் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணை அகற்றி அதன் மீது ஜல்லி கற்களை வைத்து பலப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலை தரம் இல்லாமல் அமைத்தால் சாலை சீரமைத்த ஓரிரு மாதங்களில் சேதமாகும். இதனால் அரசு பணம் வீணாவது மட்டும் இல்லாமல் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த சாலை மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து தரமான சாலையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரும்புதூர் அருகே ரூ.8 கோடியில் வெங்காடு சாலை விரிவாக்கப்பணி: சாலை தரம் இல்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.