பெரும்பாறையில் தீ தடுப்பு கண்காணிப்பு கோபுரத்தில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

9 hours ago 1


பட்டிவீரன்பட்டி: பெரும்பாறையில் உள்ள தீ தடுப்பு கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதுடன், மதுபாட்டில்களை உடைத்து வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது பெரும்பாறை. இப்பகுதி வத்தலக்குண்டு மற்றும் கன்னிவாடி வனக்கோட்டங்களுக்கு உட்பட்டது. தற்போது நிலப்பரப்பு பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் குளுமையான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
இதனால் விடுமுறை நாட்களில் குளுமையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

வனப்பகுதிகளில் தீ வைப்பவர்களை கண்காணிக்கவும், தீ பரவாமல் தடுக்கவும், வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ‘தூக்கிவச்சான் கல்’ என்ற பகுதியில் வனத்துறை சார்பில் தீ தடுப்பு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாறைக்கு வரும் டூவீலர் மற்றும் காரில் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர். மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை வனப்பகுதியில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தீ தடுப்பு கண்காணிப்பு கோபுரத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post பெரும்பாறையில் தீ தடுப்பு கண்காணிப்பு கோபுரத்தில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article