மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 2022ம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனாயில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். கடந்த 2024 பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா (ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2022ல் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னாவிசுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நாக்பூரில் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘என்னை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். என்னை சாதாரணமாக நினைத்தவர்களிடம், நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். சாதாரண கட்சி தொண்டர் தான்.
ஆனால், நான் பால் தாக்கரேவின் தொண்டராக இருந்தவன். எல்லோருக்கும் என்னை பற்றி இந்த புரிதல் இருக்க வேண்டும். கடந்த 2022ல், நான் ஆட்சியையே மாற்றினேன். பேரவையில் எனது முதல் உரையில் கூறியபடி, தேர்தல் முடிவுகள் அமைந்தது. அதனால்தான் சொல்கிறேன் என்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த வார்த்தைகள் யாருக்கோ அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்றார். எனவே ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஏற்கனவே ஆட்சியை கவிழ்த்த அனுபவம் இருக்கு: என்னை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்! பட்நாவிசுக்கு ஏக்நாத் மிரட்டல் appeared first on Dinakaran.