பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை விஜய் கட்சி மாநாடு

2 months ago 12

விக்கிரவாண்டி,

திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.

அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

 

இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன.

 

மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர். இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

 

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று மாலையுடன் அத்தனை பணிகளையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

 

நாளை மாநாடு

இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.

மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.

 

தொண்டர்கள் மத்தியில் அரசியல் உரை

அதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பேச உள்ளனர். இவர்கள் பேசி முடித்ததும் மாநாட்டின் நிறைவாக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அங்கு திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில் தனது அரசியல் பேச்சை பேச உள்ளார்.

மாநாட்டுக்கு விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை-திருச்சி மார்க்கத்தில் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வி.சாலை பகுதியே எங்கும் மஞ்சள், சிவப்பு கொடியுமாக காட்சி தந்து வண்ணமயமாக திகழ்ந்து வருகிறது.

இதற்கிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி.அஷ்ராகார்க் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நாளை மாநாடு நடைபெற உள்ளநிலையில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தமிழக வெற்றிக் கழகம், தளபதி விஜய் என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

விஜய் அழைப்பு

முன்னதாக மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து விஜய் கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில், "மாநாடு நிகழப்போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்து விட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப்போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பலமடங்கு கூட்டப்போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். நம் வெற்றி கொள்கை திருவிழாவை கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள்.

நம் கட்சி கொடியை கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இருகரங்களையும் விரித்தபடி, இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்" என்று அதில் விஜய் தெரிவித்திருந்தார்.

Read Entire Article