குமுளி: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டுக்கு 999 ஆண்டு குத்தகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசால் சுமார் 8,200 ஏக்கருக்கு ஆண்டு தோறும் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. பெரியாறு அணை நீர்தேக்கம், நீர்திறப்பு, கண்காணிப்பு என்று அனைத்தும் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேசமயம், அணை பாதுகாப்புக்காக கேரள போலீஸாரே இங்கு உள்ளனர். இதற்காக ஒரு டிஎஸ்பி தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் என 120 போலீஸார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.