பெரியார் பல்கலை பொறுப்பு துணைவேந்தர் அதிரடி நீக்கம்: நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

1 day ago 4

ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அரசு செயலாளர் தலைமையில், ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக 8வது துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஜெகநாதன் பதவிக்காலம் முழுக்க மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. அரசின் உரிய அனுமதி பெறாமல், ஆதாயம் பெரும் வகையில் அறக்கட்டளை தொடங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் பதவி காலம் முழுக்க ஆளுநருக்கு மிகப்பெரிய விசுவாசியாகவும், தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் செயல்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தையும் ஓராண்டு நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

பதவி நீட்டிப்பு காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 19ம் தேதி துணைவேந்தர் ஜெகநாதன் பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் வழக்கமான நடைமுறையின் படி, ஆட்சிமன்ற நிர்வாக குழுவை அமைக்காமல் தன்னுடைய ஆதரவாளரான தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பெரியசாமியை பொறுப்பு துணைவேந்தராக, ஜெகநாதன் நியமித்து விட்டார். உரிய விதிமுறைகளையும் அரசின் வழிகாட்டுதல்களையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்நிகழ்வினை கண்டித்து, கடந்த ஒரு வார காலமாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிர்வாக பணிகளை கவனிக்கும் பொருட்டு, கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை அமைத்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் சுப்பிரமணி பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மைய இயக்குனராகவும், இதழியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post பெரியார் பல்கலை பொறுப்பு துணைவேந்தர் அதிரடி நீக்கம்: நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article