சென்னை: பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்கு வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; சென்னை, கொளத்தூர், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 18.05.2021 அன்று 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, 2022-23 ஆம் ஆண்டு சட்டபேரவை மானியக் கோரிக்கையின்போது, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்துகாய சிகிச்சை பிரிவு, தொற்றாநோய் பிரிவு, டயாலிசிஸ், இரத்தவங்கி போன்ற சேவைகள் வழங்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின்கீழ், ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி, முதலமைச்சரால் 08.03.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேலும் பல உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிரத்தியேக இருதயவியல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 4,5,6 தளங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.54.82 கோடி செலவில் 07.03.2024 அன்று முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 860 படுக்கை வசதிகள் உள்ளது. இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 102 மருத்துவர்கள், 236 செவிலியர்கள், 79 மருத்துவம் சாரா பணியாளர்கள், 20 அமைச்சுப் பணியாளர்கள், 126 பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 240 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 803 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மேலும் இப்புதிய மருத்துவமனை கட்டிடத்தில் வரவிருக்கும் உயர் சிறப்பு சிகிச்சை துறைகள் மற்றும் வசதிகள் : இருதயவியல், விரிவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, மாற்றுத்திறனாளிகள் சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, எம்.ஆர்.ஐ முழு உடல் பரிசோதனை, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, விரிவாக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு மையம், நரம்பியல், புற்றுநோயியல், சிறுநீரக சிகிச்சை, இரத்த நாள சிகிச்சை, குடல் மற்றும் இரைப்பை நோயியல், ஒட்டுறுப்பு சிகிச்சை என பல உயர்தர சிறப்பு சிகிச்சையின் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 600 உள்நோயாளிகளும், 5000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் பயன்பெறுவர்.
இப்புதிய மருத்துவமனை கட்டிடத்தில் வரவிருக்கும் இதர வசதிகள் : குளிரூட்டப்பட்ட தனிஅறைகள் மற்றும் அதிநவீன வசதிகளுடைய தனி அறைகள், 5 அதிநவீன மின்தூக்கிகள், மத்திய நுண்கிருமி நீக்கி நிலையம், நவீன சலவையகம், மத்திய மருந்தகம், மத்திய ஆய்வகம், உதவி மையம், வழிகாட்டி தகவல் பலகை, சிற்றுண்டியகம், காத்திருப்பு அறை, 24 மணிநேர தூய்மை பணி, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு சாதனங்கள், 24/7 மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் வசதி, 24/7 மருத்துவ திரவ ஆக்ஸிஜன், 108 ஆம்புலன்ஸ் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவக் கழிவு பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் செயல்பட உள்ளதால், நோயாளிகளை உயர்சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வது குறையும்.
இதனால் நோயாளிகளின் காலவிரயம் மற்றும் அலைச்சல் குறைவதுடன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பணிச்சுமையும் குறைகிறது. முதலமைச்சரின் திருக்கரங்களால் வருகின்ற பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ரூ.213 கோடி செலவில், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா ராஜன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மருத்துவக் கல்வி இயக்கக சிறப்பு அலுவலர் எம்.ரமேஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் கே.ஹேமலதா, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
The post பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார்ழ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.