பெரியார் குறித்து அவதூறு கருத்து: வடலூர் போலீசில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

3 months ago 10

வடலூர், பிப். 11: பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வடலூர் போலீசார் சம்மன் கொடுத்தனர். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி 8ம் தேதி வடலூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான், பெரியாரை பற்றி பல அவதூறு கருத்துகள் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழும்பியது. இதுகுறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் ஜனவரி 9ம் தேதி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொது இடத்தில் அமைதியை குறைக்கும் விதமாக பேசுவது, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது போன்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்ற வடலூர் போலீசார் சம்மனை வழங்கினர். அதில், வரும் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாம் தமிழர் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெரியார் குறித்து அவதூறு கருத்து: வடலூர் போலீசில் ஆஜராக சீமானுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article