பெரியபாளையம் அருகே வெள்ளப்பெருக்கினால் ஆரணியாற்று தரைப்பாலம் மூழ்கியது: 10 கிமீ சுற்றி வரும் அவலம்

4 weeks ago 6


பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போலீசார் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 10 கிமீ தூரம் சுற்றிவருவதால் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, தற்போது ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆரணியாற்றின் அருகே புதுப்பாளையம், காரணி கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கிவிட்டது. இதேபோல் மங்களம் கிராமத்துக்கு செல்ல, ஆரணியாற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாதையும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

இதனால் ஆரணியாற்றில் சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில், இந்த தரைப்பாலத்தின் முன் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இங்குள்ள தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரியபாளையத்துக்கு சுமார் 10 கிமீ தூரம் சுற்றி வரும் அவலத்துக்கு ஆளாகி, பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தரைப்பாலத்துக்கு மாற்றாக, புதுப்பாளையம்-காரணி இடையே புதிதாக ₹20 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலப் பணிக்கு கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும், தற்போது அந்த உயர்மட்ட மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. எனவே, இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அங்கு புதிதாக கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பெரியபாளையம் அருகே வெள்ளப்பெருக்கினால் ஆரணியாற்று தரைப்பாலம் மூழ்கியது: 10 கிமீ சுற்றி வரும் அவலம் appeared first on Dinakaran.

Read Entire Article