பெரியபாளையம் அருகே குவாரியில் இருந்து அளவுக்கதிகமாக சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

1 day ago 2

Periyapalayam, Lorry, Quarry* அரசுக்கு வருவாய் இழப்பு
* நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரியபாளையம் : பெரியபாளையம் அருகே, பகல் மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்பட்ட அனுமதியை மீறி குவாரியில் இருந்து அளவுக்கதிகமாக சவுடு மண் எடுத்து, அதனை தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியபாளையம் அடுத்த, ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அரியபாக்கத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 33 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் 3 அடி ஆழம் வரை மட்டுமே சவுடு மண் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் வழங்கப்பட்ட அனுமதியை மீறி தனியார் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த குவாரியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 லோடுகளுக்கும் மேலாகவே சவுடு மண் ஏற்றிக்கொண்டு அந்த நிறுவனத்தின் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. மேலும், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்னல் வேகத்தில் அந்த லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன.

இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி பட்டு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், பள்ளி நேரங்களில் லாரிகள் செல்வதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனேயே சாலையில் செல்கின்றனர்.

மேலும், விதிகளை மீறி இரவு 9 மணிக்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு அளவுக்கு மீறி மண் அள்ளி விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்களால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

மேலும், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பெரியபாளையம் போலீசார் இதனை கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு அளவுக்கதிகமாக மண் அள்ளி, அதனை இரவு நேரங்களில் லாரியில் எடுத்துச்சென்று விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே குவாரியில் இருந்து அளவுக்கதிகமாக சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article