பெரியபாளையத்தில் சிமென்ட் குடோனாக மாறிய சமுதாய கூடம்: கிராம மக்கள் அவதி

1 week ago 4

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த சமுதாய நலக்கூடம், தற்போது சிமென்ட் குடோனாக மாறிவிட்டது. இதனால் அங்கு குறைந்த செலவில் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இக்குடோனை அகற்றி, அந்த சமுதாய நலக்கூடத்தை நவீன வசதிகளுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியை சுற்றிலும் ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டுமாநகர், ராள்ளபாடி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை, தங்களின் வீட்டு திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா உள்பட பல்வேறு விசேஷங்களை நடத்துவதற்கு ஊத்துக்கோட்டை, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அதிக பொருட்செலவில் நடத்துவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 1999ம் ஆண்டு பெரியபாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு இந்த சமுதாய நலக்கூடம் பழுதடைந்ததால் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த சமுதாய நலக்கூடத்தை சிமென்ட் குடோனாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெரியபாளையம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், தங்களின் வீட்டு விசேஷங்களை குறைந்த செலவில் நடத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பெரியபாளையத்தில் சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் சிமென்ட் குடோனை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். அக்கூடத்தை முறையாக சீரமைத்து, நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடமாக மாற்றி, மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பெரியபாளையத்தில் சிமென்ட் குடோனாக மாறிய சமுதாய கூடம்: கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article