பெரியகுளம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

1 month ago 7

பெரியகுளம், அக். 5: பெரியகுளம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான 127 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் போதைப் பொருள் தடுப்பு தனிப்படையினர் பெரியகுளம் அருகே உள்ள தெ.கள்ளிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் ரகசிய அறை அமைக்கப்பட்டு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கு 8 மூடைகளில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட சுமார் 127 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. விசாரணையில், பெரியகுளத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவர் வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்திவந்து சுப்பிரமணி வீட்டில் பதுக்கி வைத்ததும்,

இருவரும் சேர்ந்து சுப்பிரமணி தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புகையிலை பொருட்களை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. அங்கிருந்த புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகமது இப்ராஹிமை தேடி வருகின்றனர்.

The post பெரியகுளம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article