பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைவது எப்போது: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் கொடிக்கால் விவசாயிகள்

12 hours ago 4


தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதியில் வெற்றிலை சாகுபடியை அதிகரிக்கவும், வாடல் நோய் தாக்குதலை தடுக்கவும், அரசு தோட்டக்கலைக்கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய ஊர்களில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி நடைபெற்று வந்தது. வெற்றிலையில் வாடல் நோய் தாக்குதலால் கொடிக்கால் விவசாயிகளும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இதனால், பெரியகுளம் பகுதியில் வெற்றிலை சாகுபடி படிப்படியாக குறைந்து 200 ஹெக்டே பரப்பளவில் மட்டும் தற்போது விவசாயம் நடந்து வருகிறது.

வெற்றிலையில் வாடல் நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து, அதற்கு தீர்வு கண்டால் விவசாயிகள் சாகுபடி பரபரப்பை அதிகரிக்க வழி வகுக்கும். எனவே, பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை வாடல் நோய் குறித்து ஆராய்வதற்கும், வெற்றிலை சாகுபடியை அதிகரிப்பது குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேல்மங்கலம் வெற்றிலை சாகுபடி விவசாயி முருகன் கூறுகையில், ‘பெரியகுளம் ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் இருந்தனர். 25 ஆயிரம் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் வெற்றிலை சாகுபடியை மட்டும் நம்பி இருந்தனர். வெற்றிலை கொடிக்கால் 3 ஆண்டு சாகுபடி பயிராகும்.

பெரியகுளம் பகுதியில் இருந்து அறுவடை செய்யப்படும் வெற்றிலை வடமாவட்டங்கள், வடமாநிலங்களுக்கு தினசரி டன் கணக்கில் அனுப்பி வந்தனர். கடந்த 1991-92ம் ஆண்டுகளில் வெற்றிலை பயிரில் புதிய வாடல் நோய் தாக்க ஆரம்பித்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து மகசூலுக்கு வரும்போது வாடல் நோய் தாக்கி வெற்றிலை கொடி முற்றிலும் காய்ந்து போனது. இதனால், விவசாயிகளும் பொருளாதார இழப்பீடு ஏற்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால், வேறு விவசாயத்துக்கு விவசாயிகள் மாறினர். கரும்பும், வாழையும் ஒரு வருடத்துக்கு பின்பு மகசூல் கொடுக்கிறது. ஆனால், வெற்றிலையைப் பொறுத்தவரை கொடிகள் நடவு செய்த 6 மாதம் கழித்து 40 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். கொடிக்கால் விவசாயிகளுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை வருவாய் கிடைத்து வந்தது.

எனவே, வெற்றிலை சாகுபடியை பாதுகாக்க, நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய, பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்றார். ஜெயமங்கலம் வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், ‘பெரியகுளம் வட்டாரத்தில் முக்கியப் பணப்பயிராக வெற்றிலை கொடிக்கால் சாகுபடி திகழ்கிறது. இந்த பகுதியில் நாடு, கருகமணி, கற்பூரவெற்றிலை உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும். வாடல் நோய் தாக்குதல் காரணமாக வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரத்தை தேடி தொழில் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். பெரியகுளம் பகுதி வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்கவேண்டும். அதன் மூலம் வெற்றிலை பயிரில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி செய்து வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும்’ என்றனர்.

The post பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைவது எப்போது: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் கொடிக்கால் விவசாயிகள் appeared first on Dinakaran.

Read Entire Article