பெரம்பலூர் போக்குவரத்து காவல்துறை- தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 week ago 1

 

பெரம்பலூர், பிப்.1: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை (ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை) முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, மக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த நிகழ்விற்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் திரு. அ.சீனிவாசன் அய்யா அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் அறக்கட்டளை உறுப்பினர் திரு ராஜபூபதி மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். வேந்தர் அ. சீனிவாசன் உரையாற்றியபோது, \”இளைஞர்களின் பங்கு சாலை பாதுகாப்பில் மிக முக்கியமானது. சாலை விதிகளை கடைப்பிடித்து செயல்படுவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம்.

சாலை பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமே அல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகள் ஊடாக, நாம் சாலை விபத்துகளை குறைத்து பல உயிர்களை காப்பாற்றலாம். அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன், பொறுப்பான சாலை பயணிகளாக செயல்பட வேண்டும்,\” என்று தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு, இந்திய சாலை பாதுகாப்பு இயக்கம் (இந்தியன் ரோடு சேபிட்டி கம்பைன்) தலைமையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை, அடிப்படை நிலைகளில் பலப்படுத்த, இந்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (மினிஸ்ட்ரி ஆப் ரோடு சேபிட்டி அண்ட் ஹைவேய்ஸ்) மேற்கொண்ட தேசிய முயற்சியின் ஒரு பகுதியாகும். பாதுகாப்பான சாலைகளுக்காக அனைவரும் ஒன்றாக\” என்ற கருத்துடன், இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் கட்டுதல், வேக கட்டுப்பாட்டை பின்பற்றுதல், மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் போன்றவை விபத்துகளை குறைத்து, உயிர்களை பாதுகாக்கும் முக்கியமான செயல்பாடுகள் என்பதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெளிவாக உணர்வதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, 3,000 க்கும் அதிகமான மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக, போக்குவரத்து சிக்னலின் மூன்று நிறங்களை பிரதிபலிக்கும் வடிவத்தில் ஒழுங்காக நிறுத்தப்பட்டனர். இந்த சிறப்புமிக்க உருவாக்கம், விழிப்புணர்வை உண்டாக்கும் தன்னிகரற்ற முயற்சியாக அமைந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி குழுமத்தை சார்ந்த முதல்வர்கள், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள், துறைதலைவர்கள் மற்றும் 3500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் போக்குவரத்து காவல்துறை- தனலட்சுமி சீனிவாசன் பல்கலை. சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article