பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின விழா: இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

2 weeks ago 3

பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின விழா நேற்று 25ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலை வகித்தார். விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கும், சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவான தினமான ஜனவரி 25ஆம் நாள், தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்டக் கலெக்டர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் புதியதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேர்தல் தொடர்பான பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட சுவரொட்டி உருவாக்கும் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ரங்கோலி போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ4ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ3ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ2ஆயிரம்வீதம் பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்டக் கலெக்டர் வழங்கிப் பாராட்டினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகளையும், வாக்காளர் விழிப்புணர்வு பணிகளையும் சிறப்புடன் மேற்கொண்ட சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், சிறந்த வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், சிறந்த வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 38 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்டக் கலெக்டர் வழங்கினார். ரங்கோலி போட்டியில் வெற்றிபெற்ற சுய உதவிக் குழுவினருக்கு முதல்பரிசு ரூ5ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ4ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ3ஆயிரம் உள்ளிட்ட பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்டக் கலெக்டரால் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,

கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய மாவட்டக் கலெக்டர் 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திடவும், புதிதாக சேர்ந்துள்ள இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின விழா: இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை appeared first on Dinakaran.

Read Entire Article