பெரம்பலூர், மே.16: பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மதுர காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி இரவு பூச் சொரிதலும், 6ம் தேதி செல்லியம்மனுக்கும், மதுர காளியம்மனுக்கும் காப்பு கட்டுதல் நடந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சந்தி மறித்தல், குடிஅழைத்தல், சிவ வழிபாடு, பெருமாள் வழிபாடு, மாரியம்மன் வழிபாடும், அகண்ட லலிதா சஹஸ்ர நாம அர்ச்சனை, சாகம்பரி குங்கும அர்ச்சனையுடன் கூட்டு வழிபாடும், அய்யனார் வழிபாடு, சண்டி பாராயணமும், சண்டி மஞ்சரி மகா ஹோமம், மலை வழிபாடு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (15ம்தேதி) தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவில் சிறுவாச்சூர் கிராமப் பொது மக்கள் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமப் பொதுமக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குல தெய்வ வழிபாட்டாளர்கள், அம்மன் பக்தர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓம்காளி, ஜெய் ஜெய் காளி என்ற பக்தி பரவச கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். காலை 10.20க்கு புறப்பட்ட தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மதியம் 2.20க்கு நிலையை வந்தடைந்தது.
முன்னதாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி கே.என்.அருண் நேரு, மாவட்ட போலீஸ் எஸ்பி ஆதர்ஷ் பசேரா, மாவட்ட முன்னாள் அறங்காவலர் நியமனக்குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி தாளாளர் ராம்குமார், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாலமுருகன், டிஎஸ்பி ஆரோக்யராஜ், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை, கண்காணிப்பாளர் நிசாந்தினி, அறநிலையத் துறை ஆய்வாளர் தீபலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் அசனாம்பிகை, திருக்கோவில் பணியாளர்கள், பூசாரிகள், சிறுவாச்சூர் கிராம பொது மக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், இந்திரா, பிரபு, கிள்ளிவளவன், மகேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 226 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், சி.வி.கணேசன் வழங்கினர்
The post பெரம்பலூரில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.