![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38920694-10a.webp)
சென்னை,
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்தார். பின்னர் 2009ல் வெளிவந்த 'வெண்ணிலா கபடிகுழு' திரைப்படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
2023-ல் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர், கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தற்போது, 'ஏழு கடல் ஏழு மலை, மாமன்' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், தனது கடந்த காலத்தை நினைவு கூறும் வகையில் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் பில்டிங் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதே வேலை பார்த்து வந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.