
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்சிப் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதோடு இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசிடம் முறையிட்டு இருப்பதாகவும் விரைவில் இதற்கு அரசு தீர்வு காணும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சங்க பிரச்னைகள் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து இருப்பதை பயன்படுத்தி ஆர்கே செல்வமணி லாபம் அடைந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கம் தொடங்கிய தொழிலாளர்கள் அமைப்பை கிண்டல் கேலி செய்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களாக இருந்து பதவி ஆசையால் புதிய சங்கம் தொடங்கியவர்களோடு சேர்ந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக ஆர்.கே செல்வமணி செயல்பட்டு வருகிறார்.
இந்தப் பிரச்னைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விளக்கி கூறியுள்ளனர். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கமிஷனர் உத்தரவாதம் அளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.