பெண்ணின் ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பாம்பு

4 weeks ago 7

கோவை, மே 30: கோவையில் பெண்ணின் ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பச்சை பாம்பால் பெட்ரோல் பங்கில் பரபரப்பு ஏற்பட்டது கோவை, பன்னிமடையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.

நேற்று காலை நாகலட்சுமி வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு செல்ல அவிநாசி ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக தனது ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்கூட்டர் சீட்டை திறந்தார்.

அப்போது சீட்டின் அடியில் பச்சை நிறத்தில் நீளமான ஏதோ நெளிவதை பார்த்தார். அதை எடுக்க சென்றபோது அது பச்சை பாம்பு என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு ஸ்கூட்டரின் அருகில் இருந்து விலகி சென்றார். அதன்பின்னர் அங்கிருந்த பெட்ரோல் பங்க ஊழியர்கள் பாம்பை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு தானாக வெளியேறி பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஊர்ந்து சென்று அருகில் இருந்த காலி இடத்துக்கு தப்பிச்சென்றது.

நாகலட்சுமி வீட்டின் அருகில் காலி இடத்தில் புதர் மண்டி கிடப்பதாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் பாம்பு ஸ்கூட்டர் மீது ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்திருக்கலாம் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பதற்றத்தில் இருந்த நாகலட்சுமியை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெட்ரோல் பங்க்கில் பரபரப்பு நிலவியது.

The post பெண்ணின் ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பாம்பு appeared first on Dinakaran.

Read Entire Article