மதுரை: தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கான அரசாக செயல்படுகிறது என ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தளவாய்புரத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி கடந்த 2018ல் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் மாணவிகளை அழைத்துச் சென்றார். அப்போது ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் தமிழ்செல்வன் கைது செய்யப்பட்டார். அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து தமிழ்செல்வன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை தண்டனையை உறுதி செய்தது. மேலும், ‘‘ஆசிரியர் குரு, தந்தை ஸ்தானத்தில் இன்றி தன்னிடம் பயிலும் மாணவியிடம் தவறான நோக்கில் பாலியல் தொந்தரவு செய்த செயல் கண்டிக்கத்தக்கது. இனி விளையாட்டு துறையில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.
பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படாமல் இருக்க தமிழக அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும். இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டது. இவ்வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, மாணவிகளின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், ‘‘விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவிகள் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் போது கண்டிப்பாக ஆசிரியை உடனிருக்க வேண்டும். பெற்றோரை உடன் அழைத்துச் செல்வது மற்றும் மாணவிகள் தங்கும் அறை, கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் என ஆகியவற்றில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். விளையாட்டு மைதானங்களும் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மாணவிகள் தனியாக மறைவிடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது. விளையாட்டு போட்டி முடிந்த பின்னரோ அல்லது முன்பாகவோ வெளியிடங்களுக்கு செல்லும்போது உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. மாணவிகளுக்கு பாலியல் குறித்த ஆலோசனைகளும், தற்காப்பு கலைகள் போன்றவையும் கற்றுக் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது’’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழ்நாடு அரசு சமூக நீதியை கடைபிடித்து வருகிறது. பெண்கள், மாணவிகள் பாதுகாப்பு விஷயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்பது ஏற்கத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட மாணவி பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளார். எனவே தான் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு, மாணவிகளின் பாதுகாப்பு குறித்து உரிய சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும் என விரும்பியது.
இதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசின் தலைமைச் செயலர் மற்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு உரிய நேரத்தில் இதை கொண்டு சென்று பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கி அதனை செயல்படுத்தியுள்ளனர். இந்த அறிக்கை நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு உடனடியாக எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவிற்கும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கான அரசாக செயல்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.
The post பெண்கள், மாணவிகள் பாதுகாப்பில் பல்வேறு நடவடிக்கை சமூகநீதிக்கான அரசாக தமிழக அரசு இருக்கிறது: ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.