துபாய்,
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 44 ரன்களும், எல்லீஸ் பெரி 31 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 42 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய அனேகே போஸ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.