சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கும் வகையில் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 10ம் தேதி 2 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தப்படி, பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையும் காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பதை மாற்றி மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. கூட்டு வன்புணர்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலும் அமிலம் முதலியவற்றை பயன்படுத்துவதன் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தால் மரண தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களைப் பின் தொடர்ந்தால் ஐந்தாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட2 சட்ட முன்வடிவுகளும் ஜனவரி 11ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்படும். சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
The post பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் appeared first on Dinakaran.