துபாய்,
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார்.
பேட்டிங் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தீப்தி சர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேனுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32வது இடத்திற்கு வந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (165 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்து (126 புள்ளி) 2வது இடத்திலும், இந்தியா (109 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன.