
குழந்தைகள் பிறக்கும்போது அந்த நேரத்தை வைத்து கணித்து எழுதப்படும் பொதுவான ஜனன ஜாதகம்போன்று, பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நாள் மற்றும் நேரத்தை வைத்து கணிக்கக்கூடிய ருது ஜாதகமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ருது என்றால் பருவம் என்று பொருள். அதாவது ஒரு பெண் பருவம் அடையும் நேரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுவதால் ருது ஜாதகம் எனப்படுகிறது.
பெண்களின் ருது கால பலன்கள்
பெண்கள் பருவம் அடையும் கிழமையை அனுசரித்து, உரிய பலாபலன்கள் ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் அடிப்படை பலன்களை பார்ப்போம்.
ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமை ருதுவாகும் பெண்களில் பெரும்பாலான பெண்கள் அழகாக இருப்பார்கள். இரக்க மனம் கொண்டவர்கள். யார் மனமும் புண்படக்கூடாது என நினைப்பவர்கள். கணவன் இவர்களின் அன்புக்கு கட்டுப்படுவார்கள்! எல்லோரையும் எளிதில் நம்பி விடுவார்கள். சிலர் ஏமாளித்தனமாகவும் இருப்பார்கள். சிலருக்கு புத்ர தோஷம், ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம்.
திங்கள்:
திங்கட்கிழமை ருதுவாகும் வெண்கள் பொதுவாக குளிர்ந்த உடலை கொண்டவர்களாக இருப்பார்கள். கற்பனை சக்திகள் அதிகம். இவர்கள் மீது கணவர் மிகவும் பிரியமாக இருப்பார். குழந்தைச் செல்வத்திற்கு பஞ்சமிருக்காது.
செவ்வாய்
செவ்வாய்க்கிழமை ருதுவாகும் பெணகள் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக விளங்குவர்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் யாரையும் நம்ப மாட்டார்கள். அதிகமான உஷ்ண உடம்பை கொண்டவர்கள். அதிக கோபம் கொண்டவர்களாக இருந்தாலும் அன்புள்ளம் கொண்டவர்கள். வீட்டில் மீனாட்சி ஆட்சிதான் நடக்கும்.
புதன்
புதன்கிழமையில் ருதுவாகும் பெண்கள் அறிவாளிகளாக திகழ்வார்கள். கலை, ஓவிய துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்! அழகான உடல்வாகு உடையவர்கள். இவர்களுக்கு வரும் கணவர் மனதுக்கு பிடித்தமானவராக இருப்பார். மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவர்.
வியாழன்
வியாழக்கிழமையில் ருதுவான பெண்கள் நற்குணம் கொண்டவர்களாக இருப்பர். அழுகும், தெய்வ பக்தியும் மிகுந்து இருக்கும். கணவர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவராக இருப்பார்கள். தன்னுடைய கணவர் மனம் புண்படக்கூடாது என நினைப்பார்கள். வீட்டில் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
வெள்ளி
வெள்ளிக்கிழமையில் ருதுவான பெண்கள் அழகாக இருப்பார்கள். கல்வி ஆர்வம் உடையவர்கள். தெய்வ பக்தி, உயர்ந்த சிந்தனை உடையவர்கள். தனித்துவமாக வாழக்கூடியவர்கள், செல்வமும் இருக்கும். சுத்தமான ஆடைகளை அணிவார்கள். புத்ர லாபம் உண்டு.
சனி
சனிக்கிழமையில் ருதுவான பெண்கள் முகப்பொலிவுடன் இருப்பார்கள். இவர்கள் அதிக உடல் உழைப்பு இல்லாமல் எல்லாவற்றையும் சாதிக்க கூடியவர்கள். பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். நேர்மையாக இருப்பார்கள். சொன்ன சொல் மாறாதவர்கள். யாருக்காகவும், எதற்காகவும் நேர்மையை விட்டுக்கொடுக்காதவர்கள். சிலர் முன்கோபத்துடன் வாழும் நிலை ஏற்படலாம்.
தற்போதைய காலத்தில் ருது கால ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. துல்லியமான ஜாதக பலன்களில் ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் பெண் பிள்ளைகளின் ருது ஜாதகத்தின் மூலம், அவர்களின் எதிர்காலம் குறித்து அறிந்து செயல்படுகின்றனர்.