ராஜ்கிர்,
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
இந்நிலையில், இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 6-ம் நிலை அணியான சீனாவுடன் மோத உள்ளது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா ஏற்கனவே லீக்கில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.