பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல்

4 hours ago 2

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமினில் வெளி வராத வகையிலும் 14 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 திங்கட்கிழமை தொடங்கியது. ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு படித்தது என பரபரப்பாக தொடங்கிய பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் குறிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

மூன்றாம் நாளான நேற்று அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம், யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிப்பது என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 4 வது நாளாக தொடங்கிய சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர் பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

 

The post பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article