பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது: தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

1 week ago 1

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டங்கள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துவிட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 10ம் தேதி, பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கும் வகையிலான 2 சட்ட திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் மீண்டும் ஒருவர் கைதானால் அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கில் தாக்கும் குற்றத்திற்கு, இனி 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை என்றும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25ம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பது தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது: தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article